செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

பழந்தமிழ்‌ முன்னோடிகள்

வள்ளலார்-இராமலிங்க-அடிகள் (1823 – 1874)

 • பதிப்பு, மெய்யியல், கவிதை, உரைநடை, மேடைத்தமிழ், மொழிஆய்வு, சித்த மருத்துவம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர். சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்தவர். அருட்பெருஞ்சோதி வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர்.
 • சீவகாருண்ய ஒழுக்கத்தோடு அன்னதானச் சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தியவர். ‘திருவருட்பா’வின் ஆசிரியர். 

23 February, 2024


'மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரனார் (1815 - 1876)

 • சிற்றிலக்கியம், இலக்கணம், இலக்கியம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • பிள்ளைத் தமிழ், தூது, உலா, குறவஞ்சி, அந்தாதி, கலம்பகம், கோவை, தல புராணம், காப்பியம் என 19ஆம்‌ நூற்றாண்டில்‌ தமிழில்‌ அதிக நூல்களை இயற்றியவர்‌.
 • உ. வே. சாமிநாதர், குலாம் காதர் நாவலர், சோடசாவதானம் சுப்பராயர், பூவாளூர் தியாகராயர், சவுரி ராயலு ஆகியோரின் ஆசிரியர்.

20 February, 2024


சி.வை.தாமோதரனார் (1832 - 1901)

 • கல்வி, இதழியல், பதிப்பு, நாவல், கட்டுரை, உரைநடை,
  ஆய்வு, இலக்கணம், அறிவியல், சட்டம், நீதித்துறை ஆகிய தளங்களில் இயங்கியவர்; இலங்கைத் தமிழறிஞர்.
 • பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச் சுவடிகளைப் பரிசோதித்துப் பதிப்பித்து வெளியிடுவதே தமிழுக்குச் செய்யும் முதன்மைப் பணி எனச் செயல்பட்டவர்.
 • தமிழ் பதிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவர்.

23 February, 2024


'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் (1855 – 1942)

 • கல்வி, பதிப்பு, உரைநடை, அனுபவக் கட்டுரை, மேடைத்தமிழ், வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு, ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து பதிப்பித்த தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
 • இவர் சேகரித்த நூல்களைப் பாதுகாக்கும் வகையில் இவரது பெயரில் 1943ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டு சென்னையில் இயங்கி வருகிறது.

23 February, 2024


தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள்

கமில் சுவலபில் (1927 - 2009)

 • மொழியியல், தமிழாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தமிழ், தமிழர் தொன்மையைப் பிறமொழியினருக்கு அறிமுகம் செய்தவர்களில் ஒருவர். செக் குடியரசு நாட்டில் பிறந்து, திராவிட மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
 • சங்க இலக்கியம், யாப்பு, வழக்குச் சொற்கள் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழின் தனித்தியங்கும் தன்மை குறித்து சர்வதேசத் தளத்தில் முன்வைத்துப் பேசிய பெருமைக்குரியவர்.

23 February, 2024


வீரமாமுனிவர் (1680 – 1747)

 • காவியம், பிரபந்தம், இலக்கணம், இலக்கியம், அகராதி, உரைநடை, இசைப்பாடல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தம் பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டவர்.
 • ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தை இயற்றியவர். திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர்.

 

20 February, 2024


ஜி. யு. போப் (1820 - 1908)

 • இலக்கணம், பதிப்பு, அகராதி, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • நாலடியார், திருவாசகம், திருக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர்.
 • இவருடைய தமிழ்–ஆங்கில அகராதி மற்றும்
  ஆங்கிலம்-தமிழ் அகராதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

23 February, 2024


சீகன் பால்கு (1682 - 1719)

 • இசை, கல்வி, பதிப்பு, இலக்கணம், இலக்கியம், அகராதி, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • செந்தமிழில் அச்சுக்கலைக்கு அடித்தளமிட்ட ஜெர்மானியர். இந்திய மொழிகளில் தமிழில் முதன் முதலாக வேதாகமத்தை மொழிபெயர்த்து அச்சேற்றியவர்.
 • இந்தியாவில் பெண்கள் பள்ளியை முதலில் அமைத்து கைம்பெண்களை ஆசிரியர்களாக்கிய சமுதாயப் புரட்சியாளர்.

20 February, 2024


இராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)

 • மொழியியல், இலக்கணம், வரலாறு, பண்பாடு, தொல்லியல், இலக்கியம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி. வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் பதியச் செய்தவர்.
 • தமது ஆங்கில நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ வழியாகத் தமிழே  திராவிட மொழிகளுக்கு மூலம் என்பதைச் சான்றுகளுடன் நிறுவியவர்.

20 February, 2024


Page 1 of 20, showing 9 record(s) out of 177 total