கலைஞர் மு.கருணாநிதி (1924 - 2018)

கலைஞர் மு.கருணாநிதி 

(1924 - 2018)

அறிமுகம்

கலைஞர் முத்துவேல் கருணாநிதி (சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969-இல் முதன்முறையாகத் தமிழக முதல்வரானார். மே 13, 2006-இல் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

இளைஞர் அமைப்பு

கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 அன்று உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[5] இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார்.[6] சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.

 

 


முரசொலி இதழ்

முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.

அமைச்சர்

1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பின்னர்க் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

முதலமைச்சர்

1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி

1971-1976—இரண்டாவது முறையாக

1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி

1996-2001—நான்காம் முறை ஆட்சி

2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி

என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார்.

படைப்புகள்

இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.  மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம்  பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. 

 

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்

20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

சட்டமன்ற உரைகள்

1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

கலைஞர் பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

கருணாநிதி 1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.

1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். * 2010-ஆம் ஆண்டு,  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார்.

கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி!