மு. ராஜேந்திரன் (1959)

மு.ராஜேந்திரன்

(1959)

அறிமுகம்

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுக்கா வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் (1959) பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். 

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப் பணியாளராக உயர்ந்தார். 

இந்திய ஆட்சிப் பணியில் தமிழகத்தின் பலவிதமான துறைகளில் பணியாற்றி  வேளாண் துறை செயலாளராக பணிநிறைவு செய்தார்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணிகள் 

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். 
  • சேர,சோழ ,பாண்டிய,பல்லவர் கால வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார். 
  • நேரடியாக களப்பணியாற்றி தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். 
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைகளின் பசுமையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 10 இலட்சம் விதைகளை திருகிறக்கை வானூர்தி மூலம் தூவினார்.
  • ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு கரடுமுரடான பாதைகளை செப்பனிட்டு போக்குவரத்திற்கு உகந்த சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளார் .

படைப்புகள் 

600-ஆண்டு கால இவருடைய மூதாதையர்களின்  மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற ‘தன் வரலாற்’று நூலாக எழுதியுள்ளார். 

காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ‘காலா பாணி’ என்ற நாவலையும்  இவர் எழுதியுள்ளார். 

மு.ராஜேந்திரன் அ.வெண்ணிலாவுடன் இணைந்து வந்தவாசிப் போர் என்னும் வரலாற்றாய்வு நூலை எழுதியுள்ளார். ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளை 12 தொகுதிகள்  பதிப்பித்துள்ளார்.

பாதாளி என்ற சிறுகதை நூலும், ,யானைகளின் கடைசி தேசம் என்ற பயண நூலும், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், செயலே சிறந்த ல் போன்ற கட்டுரை நூல்களையும்  படைத்துள்ளார்.

       இலக்கியப் பணி விருதுகள்

  • ·         மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது.
  • ·         கவிதை உறவு - முதல் பரிசு
  • ·         கவிமுகில் அறக்கட்டளை பரிசு
  • ·         தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது
  • ·         எசு.ஆர்.எம் பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது.
  • ·         கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது
  • ·         தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு
  • ·         கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது
  • ·         கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது.
  • ·         கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது

 

சமூகப்பணி விருதுகள்

  •         தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 110 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் 19, பிப்ரவரி 2015 அன்று பெற்றார்.
  •         தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 121 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது (2013-2014) மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பெற்றார்.
  •         தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 137 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2015 -2016 ஆம் ஆண்டிற்கான ரூ.5 கோடி பணப் பரிசுடன் கிருஷி கர்மான் விருதினைப் பெற்றார்.
  •         மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 2011-ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரிடம் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  •         திருவண்ணாமலை ஆட்சியராக இருந்தபோது 2010-ஆம் ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதற்காக இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமாகும். இச்சிறப்பிற்காக வழங்கப்பட்ட விருதை மாண்புமிகு பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோரிடம் இருந்து பெற்றார்.
  •         மின் ஆளுமையை (e-governance) விவசாயத் துறையில் சிறப்பாக பயன்படுத்தியதற்காக தங்க விருதும் ரூ.2 லட்சம் ரொக்கம் பரிசும் துறையின் மற்ற 5 அலுவலர்களோடு சேர்ந்து பெற்றார்.
  •         2001 - ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை தனி அலுவலராக இருந்தபோது தொழில் நுட்பத் திறமைக்காக இந்திய அளவில் முதல் பரிசும், கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் பரிசும் பெற்றார்.