பொன்னீலன் (1940)

பொன்னீலன் 

(1940)

 

அறிமுகம்

பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் இளங்கலை படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியத் துறையில்

நெல்லையில் இருந்த நாட்களில் தி. க. சிவசங்கரன் இவருக்கு நெருக்கமானார். தாமரை இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருந்த அவர் பொன்னீலனை சிறுகதைகள் எழுதும்படி தூண்டினார். முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டுவந்தது 1976ல் வெளிவந்த 'கரிசல்' என்ற நாவலே. இது பொன்னீலன் அப்போது பணியாற்றிவந்த கோயில்பட்டி மக்களையும் நிலத்தையும் சித்தரிக்கும் 'சோஷலிச யதார்த்தவாத' நாவலாகும்.

பொன்னீலனின் பெரும் படைப்பு 1992ல் வெளிவந்த 'புதிய தரிசனங்கள்' என்ற இரண்டு பாக நாவல். இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் இந்நாவல் ஜனநாயகத்தின் வேர்களைத் தேடும்படைப்பு. அக்காலத்தில் பொன்னீலனின் கட்சி எடுத்த நெருக்கடி நிலைத் தரவு நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமரிசிக்கும் படைப்பும் கூட.

பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.

 

 படைப்புகள்

புதினங்கள்

  • கரிசல்
  • கொள்ளைக்காரர்கள்
  • புதிய தரிசனங்கள்
  • தேடல்
  • மறுபக்கம்
  • பிச்சிப் பூ
  • புதிய மொட்டுகள்
  • ஊற்றில் மலர்ந்தது

சிறுகதைகள்

  • இடம் மாறிவந்த வேர்கள்
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
  • உறவுகள்
  • புல்லின் குழந்தைகள்
  • அன்புள்ள
  • நித்யமானது