வி கனகசபை (1855 - 1906)

வி.கனகசபை (1855 - 1906)

அறிமுகம் 

சென்னை, கோமலீஸ்வரன் பேட்டையில் மே மாதம் 25-ந்தேதி 1855 -ம் ஆண்டு தமிழ் பண்டிதர் யாழ்பாணம் விஸ்வநாதன் என்பவருக்கு மகனாக பிறந்தார்.  வி.கனகசபை  பி.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். இவர்  வழக்கறிஞராகவும், பிறகு அஞ்சலகத்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர்.

தன் 29ம் வயதில் தொடர்ந்து தன் தந்தை தாய் இரு குழந்தைகள் என அடுத்தடுத்து மரணங்களை சந்தித்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், பதிப்பாளர், இலக்கிய வரலாற்றாசிரியர் என தனது தமிழ் பணியில் இடைவிடாது பயணித்தவர்.

தமிழ்ப்பணி 

  • தன் பணி நிமித்தமாக எந்த ஊர் சென்றாலும் அங்கு ஏட்டுச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டு காலம் கடுமையாக உழைத்துத் தொகுத்த அத்தனை ஏடுகளையும் உ.வே.சாமிநாத ஐயருக்கு அவ்வப்போது வழங்கி வந்தார்.
  • பத்துப்பாட்டு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மூல ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து உ.வே.சா அவர்களின் அச்சுப்பணிக்கு கொடுத்துதவியவர். 
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் செம்மாந்த வாழ்வியலை வரலாற்று அடிப்படையில்  இவ்வுலகுக்கு ஆங்கிலத்தில் உணர்த்திய பெருமை வி.கனகசபை அவர்களைச் சாரும்.
  • தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து காலவரிசைப் படுத்தியவர். அதற்கு அவர் கையாண்ட கஜபாகு காலம்காட்டி முறைமை பிற்காலத்தைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
  • ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

படைப்பு

  • இலக்கியங்களை, வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகவே கருதி அவற்றின் அடிப்படையில் இவர் எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள்  தொகுக்கப்பட்டு, ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்' (Tamils Eighteen Hundred years ago)என்ற நூலாக வெளியிடப்பட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவும் இடம்பெற்றிருந்தது. 
  • தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் (The conquest of Bengal and Burma by the Tamils; Rajaraja Chola) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
  • சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்களை ஆராய்ந்து,  இவர் எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் தனியாகத் தொகுக்கப்பட்டு ‘The Great Epics of Tamil’ என்ற நூலாக வெளியிடப்பட்டது
  • ‘மகா வம்சம்’ போன்ற புத்த இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதினார்.
  • கலிங்கத்துப் பரணிக்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை எழுதி அவற்றை பம்பாயின் பிரபல வரலாற்று இதழான ‘The Tamilian Antiquary’  இதழில் வெளியிடச் செய்தார்.

மொழிபெயர்ப்பு 

  • களவழி நாற்பது , கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

விருதுகள்/ சிறப்புகள்

  • தனது சூளாமணி பதிப்புரையில் "எனது நண்பரும் பண்டைத் தமிழ் ஆராய்ச்சியே தமக்கு பொழுது போகும் வினோதமாக உடையவரும்  .. ஸ்ரீ மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளை அவர்கள்"- என்று தாமோதரம் பிள்ளை போற்றுகின்றார்.
  • தமது பத்துப் பாட்டு முகவுரையில் "பழைய தமிழ் நூலாராய்ச்சியிலேயே இடைவிடாது செய் தொழுகுகின்றவராகிய தபால் .. ஸ்ரீ வி. கனகசபை பிள்ளை"-என்று உ. வே. சா. குறிப்பிடுகின்றார்.
  • "கனகசபை போன்ற விரிந்த மனப்பான்மை தமிழ் அறிஞர்களுக்கு அமைந்திருக்குமாயின் எத்தனையோ அரிய பழந்தமிழ் நூல்களை நாம் இன்று இழந்திருக்க மாட்டோம்"--என்று இவரது பெருந்தன்மையை பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை போற்றுகின்றார்.