செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

தனித்தமிழ் அறிஞர்களஂ

ந.சி.கந்தையா (1893-1967)

  • கல்வி, கட்டுரை, உரைநடை, மொழியாய்வு, அகராதி, பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ் இலக்கிய அகராதி, திருக்குறள் அகராதி, காலக்குறிப்பு அகராதி முதலான அகராதி நூல்களைப் படைத்து அகராதித் துறையில் பெரும் பங்களித்தவர். பொது அறிவுத் துறையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
  • திராவிட நாகரிகம், தமிழ் மொழி ஆகிய இரண்டும் உலகில் தொன்மையானவை எனத் தகுந்த சான்றுகளுடன் விளக்கியவர்.

25 August, 2024


பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)

  • இதழியல், பதிப்பு, கல்வி, நாவல், உரைநடை, நாடகம், கவிதை, ஆய்வு, மொழி வரலாறு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
    தமிழைச் ‘செம்மொழி’ என முதன்முதலில் முழங்கியவர். திராவிட மொழிகளில் தமிழே முதன்மையானது என மெய்ப்பித்தவர்.
  • குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியவர்.

24 February, 2024


மறைமலையடிகள் (1876 - 1950)

  • இதழியல், பதிப்பு, கல்வி, தமிழாய்வு, கட்டுரை, நாவல், மேடைத்தமிழ், மொழிபெயர்ப்பு, அறிவியல், சித்த மருத்துவம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தூய தமிழில் எழுதிப் பிறரையும் அவ்வாறே எழுத ஊக்குவித்தவர். தமிழில் கலைச் சொல்லாக்கம், ஆட்சிமொழி ஆகியவற்றிற்குப் பங்களித்தவர்.
  • தமிழியம் என்னும் பண்பாட்டு-அரசியலியக்கத்தின் முதன்மை ஆளுமையாளர்.

24 February, 2024


தேவநேயப் பாவாணர் (1902 - 1981)

  • கல்வி, கட்டுரை, மேடைத்தமிழ், வரலாறு, பண்பாடு, மொழியியல், நாட்டாரியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • ‘சொற்பிறப்பியல் அகரமுதலி’யை உருவாக்கியவர். அதன் திட்ட இயக்குநராகச் செயல்பட்டவர். தமிழ்மொழியின் வேர்ச்சொற்கள், வளர்ச்சி மாற்றம் குறித்த ஆய்வுகளைச் செய்தவர்.
  • தமிழியப் பண்பாட்டு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தனித்தமிழ்க் கழகத் தலைவர். ‘மொழிஞாயிறு’ எனப் போற்றப்படுபவர்.

 

25 February, 2024


அகராதி/கலைக்களஞ்சியம் தொகுத்தோர்கள்

ம. பெரியசாமி தூரன் (1908 - 1987)

  • இதழியல், பதிப்பு, கல்வி, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், திறனாய்வு, தமிழிசை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • நவீன தமிழ் அறிவியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல தொகுதிகள் கொண்ட தமிழின் முழுமையான கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்.
  • ‘பத்மபூஷண்’, ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

25 February, 2024


கீ.இராமலிங்கனார் (1899-1986)

  • மொழியியல், கட்டுரை, ஆய்வு, ஆட்சிமொழித்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • அரசு அலுவலகங்கள், நகராட்சி மன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்கியவர். ஆட்சித்துறைச் சொற்களைத் தொகுத்து அகராதியை உருவாக்கியவர்.
  • ஆட்சிமொழித்துறை அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். நகராட்சித் தெருக்களுக்குத் தமிழிலக்கியங்கள், புலவர்கள் பெயர்களைச் சூட்டியவர். ஆட்சிமொழிக் காவலர்’ எனப் போற்றப்படுபவர்.

25 February, 2024


சா.ஞானப்பிரகாசர் (1875 - 1947)

  • இதழியல், பதிப்பு, மொழியியல், வரலாற்றாய்வு, நாவல், கவிதை, வாழ்க்கை வரலாறு, மானுடவியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • 'சொற்பிறப்பு-ஒப்பியல் அகராதி’ என்னும் அகராதி நூலை எழுதியவர். தமிழ் வேர்ச்சொற்களின் தொன்மை, தனித்தியங்கும் தன்மை எனத் தமிழின் தனிச்சிறப்புகளை ஆய்ந்து அறிந்தவர்.
  • 'சொற்கலைப் புலவர், 'வேர்ச்சொல் அறிஞர் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.

25 February, 2024


ஆ.சிங்காரவேலனார் (1855 - 1931)

  •  கல்வி, கலைக்களஞ்சியம், அகராதி ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • ‘அபிதான சிந்தாமணி’ என்னும் தொடக்ககாலத் தமிழ்க் கலைக்களஞ்சியத்தை வாழ்நாள் முழுதும் களப்பணியாற்றி உருவாக்கியவர்.
  • அகராதி அமைப்புடன் அமைந்த பக்கங்களைக் கொண்ட ‘அபிதான சிந்தாமணி’ இன்றும் தொல்தமிழ்ச் செய்திகளுக்கான கலைக்களஞ்சியம் என்னும் நோக்கில் மதிக்கப்படுகிறது.

 

25 February, 2024


நா.கதிரைவேலர் (1871-1907)

  • கல்வி, சமயம், மேடைத்தமிழ், அகராதி, இலக்கண ஆய்வு, பதிப்பு, செய்யுள், தல புராணம், தருக்கம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்தவர். இவரின் நைடத உரையும் அகராதிப் பணிகளும் போற்றுதலுக்குரியன.
  • ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்யும் ‘சதாவதானம்’ என்னும் கவனகக் கலையில் வித்தகர். ‘நாவலர்’, ‘மகாவித்துவான்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப்  பெற்றவர்.

25 February, 2024


Page 3 of 20, showing 9 record(s) out of 177 total