இன்குலாப் (1944 - 2016)

இன்குலாப்

(1944 - 2016)

அறிமுகம்

இன்குலாப் (Inkulab) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.

 பிறப்பும் படிப்பும்

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.

 படைப்புகள்

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.

 கவிதைத்தொகுதிகள்

இன்குலாப் கவிதைகள் (1972), வெள்ளை இருட்டு (1977), சூரியனைச் சுமப்பவர்கள் (1981 திசம்பர்), கிழக்கும் பின்தொடரும் (1985 பிப்ரவரி), கூக்குரல், இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு, ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய கவிதைகளும் அடங்கியது 1999), ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2004 வரை எழுதிய கவிதைகளின் தொகுதி - 2004), பொன்னிக்குருவி (2007 நவம்பர்), புலிநகச்சுவடுகள், காந்தள் நாட்கள் (2016) - 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்

விருதுகள்

 சிற்பி இலக்கிய விருது

 கலைமாமணி விருது