நீலபத்மநாபன் (1938)
நீல. பத்மநாபன்
(1938)
அறிமுகம்
நீல பத்மநாபன் (நீலகண்டப்பிள்ளை பத்மநாபன்) (பிறப்பு: ஏப்ரல் 26, 1938) தமிழ் எழுத்தாளர். யதார்த்தவாத-இயல்புவாத அழகியலின் முன்னோடிகளில் ஒருவராக விமர்சகர்களால் கருதப்படுபவர். நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்னும் ஊரில் ஏப்ரல் 26, 1938 அன்று பிறந்தார். தந்தை நீலகண்டப்பிள்ளை. தாய் ஜானகி அம்மாள். இவருடைய தந்தை திருவனந்தபுரத்தில் மரக்கடை ஒன்றில் பணியாற்றினார். ஆகவே இளமைப்பருவம் திருவனந்தபுரத்தில் கழிந்தது. நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார்.கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956-1958-ம் ஆண்டுகளில் இயற்பியல் பயின்று இளங்கலை (BSc.) பட்டம் பெற்றார். கேரளப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வென்று திரிச்சூரில் சிலகாலம் இளநிலை அரசு ஊழியராகப் பணியாற்றினார். அவ்வேலையை துறந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் இளங்கலைப் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றார்.
இலக்கியப் பணிகள்
நீலபத்மநாபனின் முதல் படைப்பு 'பதில் இல்லை' என்னும் சிறுகதை. இது 1956-ல் கல்லூரி மலரில் வெளியாகியது. அப்போது அவருக்கு வயது 18. உதயதாரகை என்னும் நாவலை தன் 20-வது வயதில் எழுதினார். ஆனால் அது 1980-ல்தான் வெளிவந்தது. அவருடைய இரண்டாம் நாவலான இஞ்சீனியர் 1965-ம் ஆண்டு வெளிவந்தது. மொழியியல் அறிஞர் வ.ஐ. சுப்ரமணியம் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். 1968-ல் வெளிவந்த மூன்றாவது நாவலான தலைமுறைகள் தான் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றது.
நீல பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதி என்னும் நாவல் இலக்கியப்பூசல் தன்மை கொண்டது. இதில் ஓர் எழுத்தாளன் தன் படைப்புக்களை அச்சில் கொண்டுவர படும் துயரங்களை விரிவாக எழுதியிருக்கிறார். இது அவருடைய தனியனுபவங்களை ஒட்டிய சித்திரம்.
நீல பத்மநாபன் பெரும்பாலும் தன் சொந்தவாழ்க்கையின் அணுக்கமான சாயல் கொண்ட படைப்புகளை எழுதுபவர். பெரும்பாலான கதைகள் அவர் பிறந்த இரணியல், அவர் வாழும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களைக் களமாகக் கொண்டவை. அவருடைய குடும்பப்பின்புலம், அவருடைய அலுவலகச்சூழல் ஆகியவற்றை ஒட்டிய புனைவுகளாக தலைமுறைகள், உறவுகள், மின்னுலகம் ஆகிய நாவல்கள் அமைந்துள்ளன.
நீல பத்மநாபன் கவிதைகள் நேரடியான உணர்ச்சிப்பெருக்குகளாக அமைபவை.யாப்பில்லாமல் ஓசையொழுங்குடன் அமைந்த அக்கவிதைகளில் ஐயப்பப் பணிக்கர் போன்றவர்கள் எழுதிய யாப்பற்ற ஆனால் இசையமைதி கொண்ட மலையாளக் கவிதைகளின் அழகியல் செல்வாக்கு உண்டு.
பொதுவாக உறவுகளிலும், அரசு குடும்பம் போன்ற அமைப்புக்களிலும் சிக்கி சிதைவுறும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை நீல பத்மநாபன் எழுதினார்.
நீல பத்மநாபன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புகொண்டு இலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறார். சிறுகதைகளுக்காக 'நீலபத்மம்' என்னும் இலக்கிய விருது திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது.கவிதைகளுக்காக தலைமுறைகள் விருது வழங்கப்படுகிறது. அவருடைய பிறந்தநாளான ஏப்ரல் 26 அன்று இவ்விருது அளிக்கப்படுகிறது.
விருதுகளும் பரிசுகளும்
- ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசு 1977 (உறவுகள்)
- தமிழ் அன்னை விருது 1988
- சாகித்திய அகாதமி விருது 2007 (இலை உதிர் காலம்)
- கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின்ரங்கம்மாள் பரிசு (இலையுதிர்காலம்)
- மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது
- தமிழ்நாடு அரசு விருது
- மைசூர் சிஐஐஆரின் பாஷா பாரதி பரிசு
படைப்புகள்
தமிழ் நூல்கள்
- தலைமுறைகள் - ஜெயக்குமாரி ஸ்டோர் வெளியீடு, நாகர்கோவில், 1968
- பள்ளிகொண்டபுரம் - வாசகர் வட்டம், 1970
- பைல்கள் - ஜெயக்குமாரி ஸ்டோர் வெளியீடு, நாகர்கோவில், 1973
- உறவுகள் - ஜெயக்குமாரி ஸ்டோர் வெளியீடு, நாகர்கோவில், 1975
- மின் உலகம் - 1976
- நேற்று வந்தவன் - 1978
- உதய தாரகை - 1980
- வட்டத்தின் வெளியே - 1980
- பகவதி கோயில் தெரு - 1981
- போதையில் கரைந்தவர்கள் - 1985
- தீ தீ - 1987
- முறிவுகள் - 1987
- தேரோடும் வீதி (தன்வரலாற்றுப் புதினம்) - 1987
சிறுகதைத் தொகுதிகள்
- மோகம் முப்பது ஆண்டு (11 சிறுகதைகள்), 1969
- சண்டையும் சமாதானமும் (11 சிறுகதைகள்), 1972
- மூன்றாவது நாள் (11 சிறுகதைகள்), 1974
- இரண்டாவது முகம் (19 சிறுகதைகள்), 1978
- நாகம்மாவா? (15 சிறுகதைகள்), முத்துப்பதிப்பகம், மதுரை, 1978
- சிறகடிகள் ( 13 சிறுகதைகள் ), 1978
- சத்தியத்தின் சந்நிதியில் (15 சிறுகதைகள் ), 1985
- வான வீதியில் (18 சிறுகதைகள் ), 1988
- அவரவர் அந்தரங்கம் (11 சிறுகதைகள் ), 1998
- பிறவிப் பெருங்கடல் (2008)
- கொட்டாரம் (என்னைப்போல் இருவர், ரெளத்திரம், நொண்டிப் புறா, பூஜை அறை, பகை, கொட்டாரம்) , வானதி பதிப்பகம், சென்னை, 2012
கவிதைத் தொகுதிகள்
- நீல பத்மநாபன் கவிதைகள், எழுத்து பதிப்பகம் சென்னை, 1975
- நா காக்க, 1984
- பெயரிலென்ன, 1993
கட்டுரைத் தொகுதிகள்
- சிதறிய சிந்தனைகள் (17 கட்டுரைகள்), அகரம், சிவகங்கை, 1978
- இலக்கியப் பார்வைகள் (13 கட்டுரைகள்), அமிழ்தம் பதிப்பகம், வேலூர், 1988
- சமூகச் சிந்தனை (18 கட்டுரைகள்), அமிழ்தம் பதிப்பகம், வேலூர், 1991
- யாரிடமும் பகையின்றி (21 கட்டுரைகள்), அமிழ்தம் பதிப்பகம், வேலூர், 1993
- வாழ்வும் இலக்கியமும் (14 கட்டுரைகள்), அமிழ்தம் பதிப்பகம், வேலூர், 1997
- நவீன இலக்கியம் - சில சிந்தனைகள் (18 கட்டுரைகள்), அமிழ்தம் பதிப்பகம், வேலூர், 2001
- இன்றைய இலக்கியச் செல்நெறிகள் (30 கட்டுரைகள்), இராசராசன் பதிப்பகம், சென்னை 17, 2003
- ஐயப்ப பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும், விருட்சம், சென்னை, 2006
- உணர்வுகள் சிந்தனைகள் (137 கட்டுரைகள்), நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2008
- பார்வைகள் மறுபார்வைகள், 2010
நாடகத்தொகுதி
- தனிமரம் - 2009
திரட்டுநூல்
- குருக்ஷேத்திரம் - 1976
மொழிபெயர்த்துத் தொகுத்தவை
- தற்கால மலையாள இலக்கியம் - 1985, நர்மதா பதிப்பகம், சென்னை.
- மதிலுகள் - நவீன மலையாள இலக்கியம் - 2000, காவ்யா, சென்னை
- ஐயப்பப் பணிக்கரின் கவிதைகள் - 1999
- ஐயப்பப் பணிக்கரின் கோத்ர யானம் - 2002
மலையாளப்படைப்புக்கள்
நாவல்கள்
- பந்தங்கள் - 1979
- மின் உலகம் - 1980
- தலைமுறைகள் - 1981
- பள்ளிகொண்டபுரம் - 1982
- தீ தீ - டி.சி. புக்ஸ், கோட்டயம், 1990
சிறுகதைகள்
- கதைகள் இருபது (20 கதைகள்), கரண்ட் புக்ஸ் கோட்டயம், 1980
- எறும்புகள் (20 கதைகள்), கரண்ட் புக்ஸ் கோட்டயம், 1987
- அர்கண்ட் கோனில் (20 கதைகள்), கரண்ட் புக்ஸ் கோட்டயம், 1997
- வேறத்தவர் (23 கதைகள்), கரண்ட் புக்ஸ் கோட்டயம், 2003
கவிதைகள்
- நீல. பத்மநாபன்ட கவிதைகள் - விஸ்வம் புக்ஸ், திருவனந்தபுரம், 2003
கட்டுரைகள்
- சிருஷ்டியிலே நொம்பரங்கள் - கரண்ட் புக்ஸ், கோட்டயம், 2006
ஆங்கில மொழியாக்கங்கள்
- Generations - Tr Ka. Naa. Subramaniam
- Where the Lord Sleeps - Tr. M Dakshinamurthy.
- SURRENDER AND OTHER POEMS - 1982
- POEMS BY NEELA PADMANABHAN - 2005
- THE INCARNATION (20 Short Stories) - 1987
- RELATIONS (novel) - 2003
- Birds in the Cage (novel) - Tr. M. Vijayalaxmi Qureshi
- Neela Padmanabhan - A Reader (An anthology of complete works), Ed. By Prema Nandakumar, Sahitya Akademi, New Delhi (in print)
நீல பத்மநாபனின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகள்
- நீல பத்மநாபனின் இலக்கியத்தடம் - 1999
- நீல பத்மநாபன் படைப்புலகம் - 2001
- Neela Padmanabhan - A Reader(An anthology of complete works), Ed. By Prema Nandakumar, Sahitya Akademi, New Delhi.
நீல பத்மநாபன் தமிழிலும் மலையாளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
