ம. பெரியசாமி தூரன் (1908 - 1987)

ம.ப.பெரியசாமித் தூரன் (1908 - 1987)
அறிமுகம்
ம.ப.பெரியசாமித்தூரன் செப்டம்பர் 26-ந்தேதி , 1908-ம் ஆண்டு பழனி வேலப்பக் கவுண்டர்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக ஈரோடு மாவட்டம், மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த தூரன் தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாகாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். 1926-27இல் சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை இடைநிலை (இன்டர்மீடியட்) வகுப்பில் பயின்றார். 1929 இல் இளங்கலை (பி. ஏ) கணித பட்ட வகுப்பில் சேர்ந்தார்.
கொங்கு வேளாளரில் "தூரன்" குலத்தைச் சார்ந்தவர் என்பதால் தன் பெயரோடு "தூரன்" என்று சேர்த்துக் கொண்டார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கர்நாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்.
தமிழ்ப்பணி
- மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர் எழுதிய புதினங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார்.
- பெரியநாயக்கன்பாளையத்தில் இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார்.
- 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார்.
- கலைக்களஞ்சியம் (1948-68) மற்றும் குழந்தைகள் கலைக்களஞ்சியம் (1968-76) இவற்றின் பொறுப்பாசிரியராகவும் , தமிழ் வளர்ச்சிக் கழகம் மற்றும் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், பண்ணாராய்ச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்தவர்.
படைப்புகள்
- சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. மாணவராக இருந்த போது நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட்ட தோழர்களுடன் இணைந்து 'வன மலர் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் 'பித்தன்' என்ற இதழை நடத்தி வந்தார்.
- தமிழில் முதல் கலைக்களஞ்சியம் தொகுத்தளித்தவர்.1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய பத்து தொகுதிகளை வெளியிட்டார்.
- 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.
- குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார்.
- சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.
விருதுகள்/சிறப்புகள்
- தமிழக அரசால் இவரின் சில நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் பலரும் தூரனின் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர்.
- 'பாரதி தமிழ்' நூற்பணிக்காக தமிழ் எழுத்தாளர் சங்கம் தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
- ‘கருவில் வளரும் குழந்தை’ நூலுக்காக மத்திய அரசுப் பரிசு பெற்றுள்ளார்.
- சிறுவர் கதை நூலுக்குக் குழந்தை எழுத்தாளர் சங்க பரிசு பெற்றுள்ளார்.
- பாரதி தமிழ் பணியைப் பாராட்டி பாரதியார் சங்கம் கேடயம் வழங்கியுள்ளது.
- தமிழ்ப் பணிக்காக இந்திய அரசு 'பத்மபூஷன் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது.
- சென்னை இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
- தமிழிசை சங்கம் ‘இசை பேரறிஞர்’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.