வள்ளலார்-இராமலிங்க-அடிகள் (1823 – 1874)

'வள்ளலார்' இராமலிங்க அடிகள் (1823 – 1874)
அறிமுகம்
இராமலிங்க அடிகளார் அக்டோபர் 5-ந் தேதி 1823-ம் ஆண்டு சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையா-சின்னம்மாள் இணையருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். வடலூர் இராமலிங்கம் என அறியப்படுபவர். ஓதாதுணர்ந்த அறிஞர். சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர்.
திருவருட் பிரகாச வள்ளலார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்.
“தமிழ்க் கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்கரையே சாரும்” என்கிறார் மு.வரதராசனார்.
தமிழ் மற்றும் சமுதாயப் பணி
- முருகன்,இராமன்,சிவன் என அனைத்து தெய்வங்கள் மீதும் பாக்கள் எழுதிய போதிலும் கடவுள் ஒருவரே ; எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணுதல் வேண்டும் ;கோவில்களில் உயிர்ப் பலி கூடாது என்ற சமய சீர்திருத்தக் கொள்கையுடையவர்.
- சாதி,சமய வேற்றுமைகளையும் வழிபாட்டுச் சடங்குகளையும் மறுத்து, இறையை ஒளிவடிவாக வணங்கும் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்வைத்தவர்.
- தனது சமரச சுத்த சன்மார்க்க கொள்கைக்காக ,தனிக் கொடி, தனிச் சபை , கண்ட இவர் ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை ‘ என தனி முழக்கம் கொண்டவர்.
- வடலூரில் சத்தியஞான சபையையும் சத்திய தருமசாலையையும் நிறுவி ‘ஜீவகாருண்ய’த்தை வலியுறுத்தியவர்.
- ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று இவர் ஏற்றிய ‘அணையா அடுப்பு’ இன்றளவும் வடலூர் தருமசாலையில் மக்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறது.
- இராமலிங்க அடிகள் மேற்கொண்ட சமயச் சீர்திருத்தங்கள் அன்றைய மரபார்ந்த சமயவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராகப். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், அவரின் பாடல்களை மருட்பா என்று சொல்லி மறுக்க, இருவருக்குமிடையே, அருட்பா மருட்பா விவாதமும் நடந்தது.
படைப்புகள்
- தனது ஒன்பதாவது அகவையில் கந்தகோட்டம் முருகன் மேல் ‘தெய்வமணி மாலை’ இயற்றியவர்.
- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற 2 உரைநடை நூல்களையும் ஏறத்தாழ 6000 பாக்கள், ஆறு திருமுறைகள் கொண்ட திருவருட்பாவை இயற்றியுள்ளார்.
- ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர்.
விருதுகள்
- இந்திய ஒன்றிய அரசு 2007ல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
- ‘ஜோதி வழிபாட்டை முன்னிறுத்தியதால் ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.