எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாள் கலந்துரையாடல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இரண்டாம் தளத்தின் ஆ-பிரிவில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று (08-04-2024), வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசகர்கள் கலந்து கொண்டு, ஜெயகாந்தன் பற்றிய நினைவுகளை, அவரின் படைப்புகளை, அவர் வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்களை மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வில், திரு.ஜெயகாந்தனின் படைப்புகள் பற்றிய புதிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அதில் குறிப்பாக ஜெயகாந்தனின் எட்டுச் சிறுகதைகள் தூர்தர்சனில் இந்தி மொழியில் தொடராக வெளிவந்ததை வாசகர் திரு.சுபைர்அகமது நினைவூட்டினார். ஜெயகாந்தனின் இந்தளவிற்கான எழுத்தாளுமைக்குக் காரணம் அவர், சக மனிதர்களோடு இயல்பாய், வேற்றுமை பாராட்டாமல் பழகியதாய் வாசகர் திருமதி. விஜயா நினைவு கூர்ந்தார்.

இரண்டு சிறுகதைகளை, இரண்டு வாசகர்கள் வாசித்துக் காட்டி, அதனை விவரித்தும் சொன்னார்கள். குறிப்பாக, அவர் சிறுகதைகளில் வரும் சில சம்பவங்களையும், வசனங்களையும் வாசகர் திரு. சிங்காரவேலன் வாசித்துக் காண்பித்தார். முப்பது வருடங்களுக்கு முன்பாக எழுதிய அவரின் எழுத்து வீச்சு இன்றைய எழுத்தாளர்கள் எவரும் தொட முடியாத ஒரு சவாலாக உள்ளது என மற்றொரு வாசகர் பதிவு செய்தார். நமது நூலக வாசகர் திரைப்பட இயக்குநர் திரு.காந்தி, ஓவியர் திரு.வள்ளிநாயகம் மற்றும் வாசகி பிரியதர்ஷினி உள்ளிட்ட வாசகர்கள், ஜெயகாந்தனின் படைப்புகள் பற்றி  விரிவாக எடுத்துரைத்தனர்.

  

இந்நிகழ்வு நடைபெற உறுதுணையாக இருந்த முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திருமதி. காமாட்சி அவர்கள் நன்றியுரையோடு நிறைவு செய்தார். மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம், இரண்டாம் தளம் ஆ-பிரிவில், நிகழ்வு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திரு.சதீஷ் மற்றும் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் திரு.இரவிகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர்.

இந்நிகழ்ச்சி இரண்டு மணிநேர இலக்கியப் பகிர்வாக இருந்ததை அனைத்து வாசகர்களாலும் உணர முடிந்தது.